கூடங்குளம் 2ஆவது அணுஉலை மின்சாரம் மத்திய தொகுப்பில் முதல்கட்டமாக 245 மெகாவாட் உற்பத்தி:

08/30/2016

 

கூடங்குளத்தில் அமைந்துள்ள 2ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்ட 245 மெகாவாட் மின்சாரம், மத்திய மின் தொகுப்பில் திங்கள்கிழமை காலை 11.17 மணிக்கு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உலைகளில் முதலாவது அணு உலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முழு கொள்ளளவு எட்டப்பட்டு வர்த்தகரீதியான உற்பத்தியும் தொடங்கி மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டு தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 2ஆவது உலையிலும் மின் உற்பத்திக்கான பணிகளை தொடங்கியது அணுமின் நிலைய நிர்வாகம். இதன்படி, கடந்த மே 18ஆம் தேதி உலையில் எரிபொருளான யுரேனியம் நிரப்பும் பணி நடைபெற்றது. நீரேவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட்டது. ஜூன் 18, 19, 20 ஆகிய தேதிகளில் இந்தப் பணிகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக ரஷிய விஞ்ஞானிகள் குழு, மத்திய அரசின் வல்லுநர் குழு, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியக் குழுவினர் உலையைப் பார்வையிட்டு 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வைப் பின்பற்றி மின் உற்பத்தி தொடங்குவதற்கான அனுமதி பெறப்பட்டது. கடந்த ஜூலை 10ஆம் தேதி அணுப்பிளவு (கிரிட்டிகாலிட்டி) சோதனை நடத்தப்பட்டது. அணுப் பிளவை தொடர்ந்து டர்பைன் இயக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது. திங்கள்கிழமை (ஆக.29) காலை 11.17 மணியளவில் 245 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியது:

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி அணுப்பிளவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ரியாக்டர் மூலம் மின் உற்பத்திக்கான பரிசோதனைகள் நடந்தன. பின்னர், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், இந்திய அணுமின் கழகம் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்று டர்பைன் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 11.17 மணிக்கு உலையில் இருந்து 245 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதல் உலையில் இதுவரை 189 நாள்களுக்கு தொடர்ச்சியாக இயக்கம் நடைபெற்றுள்ளது. 11,269 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.