போட்டியை சமாளிக்க 80 சதவீதம் வரை 4ஜி கட்டணத்தை குறைத்தது ஏர்டெல்

08/30/2016

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியைச் சமாளிப்பதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி மற்றும் 3 ஜி இன்டர்நெட் கட்டணத்தை 80 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஒரு ஜிபி அளவுக்கு பயன்படுத்த ரூ. 51 கட்டணம் என்ற அளவுக்கு ஏர்டெல் குறைத்துள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையி லான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சிம் கார்டை வாங்குவ தற்கு பொதுமக்களிடையே பெரு மளவு ஆர்வம் எழுந்துள்ளது. இந்த சிம் கார்டில் டேட்டா மற்றும் குரல் வழி சேவையையும் இலவசமாக வழங்குகிறது. ஸ்மார்ட்போனுட னும் இந்த சிம் கார்டு கிடைக்கிறது.

இதனால், ஏர்டெல் மற்றும் இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

தற்போது ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை கிட்டத்தட்ட ஒரே கட்டண அளவில் வழங்கி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் குறைந்த விலை திட்டங்களுடன் இறங்கியுள்ளது.

தற்போது ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா கட்டணங்களை அறிவித்துள்ளது. இதில் 3ஜி அல்லது 4ஜி சேவைகளில் மாதத்துக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 12 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ரூ.2,059 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்பு இதே அளவு பயன்பாட்டுக்கு 3,108 ரூபாய் கட்டணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தின்படி தேவைக்கு ஏற்ப ரூ.1,498 செலுத்தி புதிய திட்டத்தில் இணைந்தால் மாதத்துக்கு 1ஜிபி டேட்டா ரூ.51 ரீசார்ஜ் செய்து 12 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது 3ஜி அல்லது 4ஜி டேட்டா 1 ஜிபிக்கு ரூ.259 கட்டணமாக ஏர்டெல் வாங்கி வருகிறது.