அண்ணா சாலை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை தொடங்கியது

09/14/2016

சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை தொடங்கியது. ரூ.10 முதல் ரூ.1.20 லட்சம் வரையுள்ள பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ‘நவராத்திரி பண்டிகை’ அனைவராலும் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இந்த விழா நவராத்திரி என்ற பெயரிலும், கர்நாடகத்தில் தசரா என்றும், மேற்கு வங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் துர்கா பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரிப் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கோபிகண்ணன் விழாவுக்கு தலைமைத் தாங்கினார். கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், தமிழக கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழககத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான சந்தோஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண், சுடு களிமண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பொம்மைகளும் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.1,20,000 வரையுள்ள பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி மற்றும் விற்பனை அக்டோபர் 13-ம் தேதி வரை (ஞாயிறு உட்பட) தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்காக கண்காட்சி மற்றும் விற்பனை நடத்துவதாக பூம்புகார் விற்பனை நிலையம் தெரிவிக்கிறது.