காவிரி விவகாரத்தால் சென்னையில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு

09/14/2016

காவிரி விவகாரத்தால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் எதிரொலியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்பினர் அங்கு தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக வாகனங்களை அவர்கள் தீயிட்டு எரிந்து வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, பெங்களூரு, ஓசூர், பேரிகை, மாலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்துக் குறைந்ததால், காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்தது.
ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூ.60 ஆக உயர்ந்தது. அதேபோல், தக்காளி ரூ.10 இல் இருந்து ரூ.20 ஆகவும், நூக்கோல் ரூ.22, பீட்ரூட்-ரூ.25, காலிப்பிளவர்-ரூ.35, உருளைக்கிழங்கு-ரூ.30, சின்ன வெங்காயம்-ரூ.25, அவரைக்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.45 என விலை உயர்ந்து விற்பனையானது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் இன்று புதன்கிழமை வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.