அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை

08/30/2016

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், துப்புரவுத் தொழிலாளர்கள், விதவைப் பெண்கள், பழங்குடியின, சிறுபான்மை சமுதாயத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் விஜயகார்த்திகேயன் தலைமையில் ஓட்டு வீடு, குடிசைப் பகுதிகளை ஆய்வு செய்து வீடற்றோர் கணக்கெடுப்பு மேற்கொண்டு மானியத்துடன் வீடு அமைத்து தருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய அரசு 2015-இல் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 2022-க்குள் இரண்டு கோடி வீடிகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம் ஆகும். இதில், 2015 முதல் 2017 ஆம் வரையிலான காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் கோவை மாநகராட்சியும் அடங்கும்.

இத்திட்டத்தின்கீழ், தகுதியுடைய பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் துப்புரவுத் தொழிலாளர்கள், பெண்கள் (விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை), தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சிறுபான்மை சமுதாயத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தனிப்பட்ட முறையில்  ஒருவர் கட்டும் 30 சதுர மீட்டர் (323 சதுர அடி) கொண்ட வீட்டுக்கு ரூ.2.10 லட்சம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோ வீடு இருக்க கூடாது.

இந்த வீடுகள் நிலநடுக்கம், வெள்ளம், புயல், சூறாவளி, நிலச் சரிவு மற்றும் பிற இடர்பாடுகளை தங்கும் வகையில் இந்திய தர நிர்ணய குறியீட்டின் படி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.