ஆழ்கடல் மீன்பிடித்திட்டம்! 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்

08/03/2017 தொழில்

பாக் ஜலசந்தியில் ஆழ்கடல் மீன் பிடித்திட்டம் 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அளித்தார். அப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் அவர்களை விடுவிக்கக்கோரி உடனுக்குடன் பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்தி வந்துள்ளதாகக் கூறினார். இந்திய அரசின் முயற்சியால் 251 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், தமிழக மீனவர்களின் 42 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 1500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் ஆழ்கடல் மீன் பிடித் திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும், இதன் மூலம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்