தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி: விஷால்

08/29/2016 சினிமா

 

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இளம் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து போட்டியிடுவார்கள் என்று பிறந்த நாள் விழாவில் விஷால் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் பொதுச் செயலாளர் விஷாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறது. இந்த நடிகர் சங்க நிலத்தில் இருந்த கடனை எல்லாம் அடைந்து, எவ்வித கடனும் இன்றி இருக்கிறது.

ஒரு கேள்வி கேட்டோம், பதிலே வரவில்லை என்றவுடன் தான் தேர்தலில் நின்றோம். இந்த நிலத்தில் கட்டிடம் கட்டும் வரை குதிரை போல ஓடிக் கொண்டே இருப்போம். நாங்கள் யாரும் பதவி ஆசைக்காக வரவில்லை. நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும். ஊழல் என்ற பேச்சுக்கே நடிகர் சங்கத்தில் இடமில்லை.

நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நடிகர் சங்கத்தில் ஒரு குண்டுசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது. நாங்கள் எங்களுக்கு பேனா தேவை என்று நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தால் கூட பொருளாளர் கார்த்தி அதற்கு அனுமதிக்கமாட்டார். இங்கே ஊழல் என்ற விஷயத்துக்கு இடமே கிடையாது. ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதைக் கொண்டு வரட்டும்.

ஜனவரி 14, 2018-ம் தேதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க தீர்மானித்திருக்கிறோம். கட்டிடம் கட்டிய அடுத்த முகூர்த்தத்தில் எனக்கு அக்கட்டிடத்தில் திருமணம் நடைபெறும். அதே போல தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக பல கேள்விகள் கேட்டு வருகிறோம். எந்தவொரு பதிலுமே இல்லை. ஆகையால், அடுத்த தேர்தலில் தயாரிப்பாளர்களாக இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி தேர்தலில் நிற்க முடிவு செய்திருக்கிறோம். கேள்வி கேட்டு பதில் வரவில்லை என்றால் மாற்றமாக இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

பிற்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று யாரும் எண்ண வேண்டாம். அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் கிடையாது" என்று தெரிவித்தார்.