சுந்தர்.சி.-யின் ‘சங்கமித்ரா’வில் ஜெயம் ரவி

08/29/2016 சினிமா

இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் ஜெயம் ரவி நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பாகுபலியை விடவும் பெரிய படம் என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விஜய் நடிக்கவேண்டும் என்று சுந்தர்.சி முதலில் விருப்பம் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பெரிய பட்ஜெட் படம் என்பதால் படப்பிடிப்பு எப்படியும் ஒருவருடம் நடைபெறும், கால்ஷீட் 250 நாள்கள் தேவைப்படும் என்கிற காரணங்களால் இப்படத்தில் நடிக்க விஜய் மறுத்தார் என்று செய்திகள் வெளிவந்தன.

தற்போது ஜெயம் ரவியை அணுகிய சுந்தர்.சி அவரிடம் கதை கூறியுள்ளார். ஏற்கெனவே 3 படங்களில் நடித்துவருவதால் அதற்கேற்றபடி நாள்களை எப்படி ஒதுக்குவது என ஜெயம் ரவி யோசித்துவருகிறார். எல்லாம் சரியாக அமைந்தால், சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி நடிக்க வாய்ப்புண்டு என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா, ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரலாற்றுப் பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ளது.