பேச்சுவார்த்தை மூலம் நடிகர் பிரச்சனையைத் தீர்க்குமாறு ரஜினிகாந்த் வலியுறுத்தியிருக்கிறார்

08/04/2017 சினிமா

 

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (ஃபெப்சி) தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையிலான பிரச்சனையின் காரணமாக, தற்போது தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடங்கியுள்ளன. பேச்சுவார்த்தை மூலம் நடிகர் பிரச்சனையைத் தீர்க்குமாறு ரஜினிகாந்த் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தப் பிரச்சனையின் காரணமாக 30க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு மட்டும் பிச்சாவரம் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றிருக்கிறது.

இந்த நிலையில், புதன்கிழமையன்று ஃபெப்சியின் தலைவரான ஆர்.கே. செல்வமணி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு, ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "தயாரிப்பாளர் சங்கமும் ஃபெப்சியும் அமர்ந்து பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதுதான் மூத்த கலைஞன் என்ற முறையில், தனது விருப்பம்" என்று தெரிவித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே. செல்வமணி, தாங்கள் முதலில் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவில்லையென்றும் இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்க்க தாங்கள் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

சினிமா தொழிலாளர்களுக்கான ஊதியம் தொடர்பாக தயாரிப்பாளர்களும் ஃபெப்சிக்கும் இடையே பிரச்சனைகள் இருந்தாலும், தற்போதைய பிரச்சனைக்கு சமீபத்தில் நடந்த சில சம்பவங்களே காரணம் என்கிறார்கள் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்.

பில்லா பாண்டி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது உள்ளூர் மக்களும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றனர். அதில் தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பல லட்ச ரூபாய் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணியும் எதிர்மாறான கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்தனர்.

இதற்கு முன்பாகவே, பல தருணங்களில் ஊதிய பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், பில்லா பாண்டி விவகாரம் நடக்கவே,தாங்கள் விரும்பினால்தான் ஃபெப்சியைச் சேர்ந்தவர்களைப் பணியில் அமர்த்துவோம் என்றும் கூடுதல் நேரம் பணியாற்றினால் ஒரு நாளுக்கான ஊதியத்தைக் கேட்க முடியாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.

மேலும், வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து புதிய ஊதிய விகிதங்களை வலியுறுத்தியும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கண்டித்தும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஃபெப்சி அறிவித்தது. இந்த நிலையில், 30ஆம் தேதியன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் ஃபெப்சியின் உறுப்பினராக உள்ள டெக்னீஷியன் யூனியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் சங்கம் சுமத்தியது.

ஃபெப்சியுடன் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும், ஒவ்வொரு முறை பிரச்சனை ஏற்படும்போதும் தயாரிப்பாளர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் தயாரிப்பாளர் தரப்பு நியாயங்களை யாரும் யோசிக்கவில்லையென்றும் அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.

மேலும், ஃபெப்சியின் உறுப்பினராக உள்ள டெக்னீஷியன் யூனியன் மட்டுமே இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்றும் தயாரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டியது. ஆகவே அந்த யூனியனுடன் இனி பணியாற்ற முடியாது என்றும் பில்லா பாண்டி படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்தால், பிற சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கம் கூறியது.

இதையடுத்து திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஃபெப்சி வேலை நிறுத்தத்தில் இறங்கியது. இதனால், ரஜினிகாந்த் நடித்த காலா, விஜய் நடிக்கும் மெர்சல் உள்ளிட்ட சுமார் முப்பது படங்களின் பணிகள் நிறுத்தப்பட்டன. இருந்தபோதும், விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தின் படப்பிப்பு சிதம்பரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தாங்கள் இப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கும் ஃபெப்சி, மாநில தொழிலாளர் நலத் துறையிடம் இது தொடர்பாக பேசிவருகிறது. தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கோரிவருகிறது.

ஃபெப்சி எனப்படும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தில் திரைத் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 23 சங்கங்களின் கூட்டமைப்பாகும். இதில் சுமார் 25,000 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கு முன்பாக 1997, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஃபெப்சி அமைப்பு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளது. 1997ல் நடந்த வேலை நிறுத்தம் சில மாதங்கள் நடைபெற்றது.