விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ​ ஹிட்!

09/15/2016 சினிமா

 

பத்து எண்றதுக்குள்ள படத்தையடுத்து விக்ரம் நடித்து வெளியாகியுள்ள படம் இருமுகன். அரிமா நம்பி படத்தை இயக்கி கவனம் பெற்ற ஆனந்த் ஷங்கர்  இயக்கியுள்ளார். நயன்தாரா, நித்யாமேனன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். விக்ரம் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

இருமுகன் கடந்த வியாழன் அன்று வெளியானது. முதல் இருநாள்களில் எதிர்மறையான விமரிசனங்கள் கிடைத்தாலும் படத்தின் வசூல் ஆரம்பத்திலிருந்தே நல்லவிதமாக இருந்தது. இதனால் படம் ஹிட் என்கிற முத்திரையை அடைந்துள்ளது. விடுமுறை தினங்கள் நிறைய கிடைத்ததாலும் இதனால் நல்ல வசூலைப் பெறமுடிந்தது. முதல் நாளில் வெளியான திரையரங்குகளைக் காட்டிலும் தற்போது அதிக திரையரங்குகளில், காட்சிகளில் வெளியாகியுள்ளது. 

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் படத்தில் பணியாற்றிய பிரபல கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த வருட ஹிட் படங்களில் கபாலி, தெறிக்குப் பிறகு அதிகம் வசூலித்த படம் இருமுகன். இரண்டாவது வாரத்தின்போது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே 450 திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக ரூ. 30 கோடி வசூலித்துள்ளது என்று இப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட்ட ஆரோசினிமாஸைச் சேர்ந்த மகேஷ் கூறினார்.

தயாரிப்பாளர் ஷிபு கூறும்போது: விக்ரம் தயாரிப்பாளர்களின் ஹீரோ. என்னை நம்பியதற்கும் இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அளித்ததற்கும் நன்றி என்றார். அன்னியன், கஜினிக்குப் பிறகு எனக்கு சவால் அளித்த படம், இருமுகன். விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே தெரிந்தது. விக்ரம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே இருமுகன் படத்தில் நடிக்கமுடியும். ஹாலிவுட்டுடன் இப்படத்தை ஒப்பிடவேண்டாம். இது அதற்கும் மேல என்றார்.