திருத்தணி அருகே மேலும் 19 பேருக்கு மர்மக் காய்ச்சல்


 

திருத்தணி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தணியை அடுத்த பொன்பாடி மேட்டுக்காலனி, முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கரண் (8), பிரவீண்குமார் (10), சஞ்சய் காந்தி (37), தங்கராஜ் (50), மணிகண்டன் (28), பாலகிருஷ்ணன் (45), சாமிநாதன் (30), முருகய்யா (60), அமுதா (32), சௌந்தரி (35), கமலா (40), லட்சுமி (42) உள்பட 19 பேருக்கு வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, இவர்கள் அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை அரக்கோணம் எம்.பி., கோ.அரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் டி.டி.சீனிவாசன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தகவல் அறிந்ததும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், வட்டாட்சியர் அபிஷேகம் ஆகியோரும், சுகாதாரத் துறையினரும் முருக்கம்பட்டு கிராமத்துக்குச் சென்று நிலவேம்புக் குடிநீரையும், மருந்து, மாத்திரைகளையும் வீடு, வீடாக வழங்கினர். மேலும், காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

சுகாதாரப் பணிகளில் 1,000 பேர்: திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரம் கிராமத்தில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் அண்மையில் உயிரிழந்தனர்.

இதையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் தலைமையில் காவேரிராஜபுரம் காலனி, அருந்ததி காலனியில் கடந்த ஒரு வாரமாக இலவச மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், மேற்கண்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இப்பணிகளை திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமராஜ் ஆகியோர் வியாழக்கிழமை நேரில்

பார்வையிட்டனர். அப்போது கிருஷ்ணமராஜ் கூறியதாவது:

திருவாலங்காடு, திருத்தணி ஒன்றியங்களிலுள்ள 30 கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு 50 மருத்துவர்கள், 150 சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், 100 சுகாதாரப் பணியாளர்கள் உள்பட மொத்தம் ஆயிரம் பேர் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, 4 நடமாடும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், வீடுகள்தோறும் நிலவேம்புக் குடிநீரும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

பொன்னேரியில்...

தேவம்பட்டு கிராமம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீஞ்சூர் ஒன்றியம், தேவம்பட்டு அருகே உள்ளது கீரப்பாக்கம் கிராமம்.

இங்கு வசித்து வரும் நாகம்மாள் மகள் வைஷ்ணவி (11), பாஸ்கர் மகன் திலிபன் (8) ஆகியோருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து, இருவரும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், சுகாதாரத் துறையினரும் கீரப்பாக்கம் கிராமத்தில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அரக்கோணத்தில்...

அரக்கோணத்தை அடுத்த ராஜபாளையம் கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவுவதால், ஒரு பெண், 4 சிறுவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரத்தில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் 4 பேர் இறந்தனர். மேலும் பலர், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், கீழ்ப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட ராஜபாளையம் கிராமத்தில் பலர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 10 நாள்களாக இக்கிராமத்தைச் சேர்ந்த பலர் அருகில் உள்ள முதூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் பாதிப்புகள் அதிகமான நிலையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் விஜய்(13), தனசேகரன் மகள் கவியரசி (7), குணசேகரன் மகள் தெரேசா (3), மணிகண்டன் மகள் துர்கா (9) ஆகியோர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோணலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜியின் மனைவி மலரும் (30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை மட்டும் ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சங்கர் கூறியதாவது:

காலநிலை மாற்றத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கும். ஆனால், நிகழாண்டில் இந்த பாதிப்புகள் ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கியுள்ளது. இந்த காய்ச்சல் குணமாகக் கூடியது தான். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இந்த காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் உள்ளன என்றார்.

இந்நிலையில், அரக்கோணம் வட்டார சுகாதாரக் குழுவினர் 15 பேர், ராஜபாளையம் கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்று, டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபால், அரக்கோணத்தை அடுத்த செம்பேடு, நந்திவேடுதாங்கல் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் புறநோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.