அண்ணா பிறந்தநாளில் 126 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள்: ஜெயலலிதா ஆணை


அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, 126 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் நிலைய அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 7 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 9 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் 8 அலுவலர்களுக்கும் மற்றும் காவல்துறை விரல்ரேகைப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் ஆக மொத்தம் 126 பேருக்கு அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வரின் 'அண்ணா பதக்கங்கள்' வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். முதலமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கண்ட பதக்கங்கள், அளிக்கப்படும். இந்த தகவலை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.