அதிமுகவில் இணைந்த 91 ஆயிரம் பேர்: இன்முகத்தோடு வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா


 

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 91 ஆயிரம் பேர் இன்று அதிமுகவில் இணைந்தனர். அவர்களை பெரும் மகிழ்ச்சியோடு முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார்.

திருச்சி முன்னாள் தாமேயர் சாருபாலா தொண்டைமான், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை பசி சத்யா உள்பட 91 ஆயிரம் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமாகாவில் இருந்து விலகிய திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை பசி சத்யா, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மகன் ரமேஷ்  ஆகியோர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி, அவர்களிடையே பேசினார்.

அப்போது, “ கடந்த காலங்களில் திமுக, பா.ஜ.க., காங்கிரஸ், தேமுதிக, பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா., மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும்; இன்ன பிற அமைப்புகளிலும் பணியாற்றி வந்த 91,308 பேர் இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அன்போடு வரவேற்று மகிழ்கிறேன்.

இங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கும் உங்களுக்கு, அதிமுக ஒரு மாபெரும் அரசியல் பயிற்சிக் களமாகத் திகழும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.

தமிழ்நாட்டில் எனது தலைமையிலான அதிமுக அரசு ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப் பணிகளைக் கண்டு, அவற்றால் பயன்பெற்று, தொடர்ந்து ஏராளமானோர் அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்தப் பணிகள் நமது மாநிலத்தைத் தாண்டி இன்றைக்கு இந்த நாடு முழுவதும் பேசப்படுகின்ற சிறப்புக்குரிய பணிகளாக அமைந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

அண்மையில் வட இந்தியாவில், ஒரு மாநிலத்தில் தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல அங்கும் உணவகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் செய்திகளை பத்திரிகைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். ஏற்கெனவே வெளி நாடுகளில் இருந்து வந்து நமது அம்மா உணவகங்களின் சிறப்பினைப் பார்த்து பாராட்டி தங்கள் நாடுகளிலும் அது போலத் தொடங்க பார்வையாளர்கள் வந்து சென்றனர். இது ஓர் எடுத்துக்காட்டு தான்.

இது போலவே, எண்ணற்ற எனது மக்கள் நலப் பணிகளை நாடு முழுவதும், ஏன், பிற நாடுகளிலும் கூட பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சி அளிக்கின்ற செய்தியாகும்.

மக்களுக்காகவே வாழும் நான், இன்னும் ஏராளமான மக்கள் நலப் பணிகளை செய்து முடித்திட ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். என்னுடைய தலைமையின் கீழ் இணைந்து பணியாற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு கழகத்தில் இணைத்துக் கொள்வதோடு, அடுத்து வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் அதிமுக சார்பில் மகத்தான வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பொது வாழ்வில் பெரும் எதிர்காலம் உண்டு. அந்த வாய்ப்புகளை உரிய நேரத்தில் உண்மையான தொண்டர்களுக்கு அளிப்பதில் அதிமுகவுக்கு நிகரான இயக்கம் வேறு எதுவும் இல்லை.
எனவே, நீங்கள் அனைவரும் மக்கள் பணிகளை சிறப்புடன் ஆற்றி, உங்கள் அரசியல் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றிட, உங்கள் எல்லோருக்கும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.