மனைவியின் உடலை தூக்கி நடந்து சென்றவருக்கு உதவ முன்வந்த பஹ்ரைன் பிரதமர்


மனாமா : ஒடிசாவில், மருத்துவமனையில் இறந்த மனைவியின் சடலத்தை, வீட்டிற்கு வாகனத்தில் எடுத்துச் செல்ல வசதியில்லாமல், 12 கி.மீ., துாரம் தன் தோளில் சுமந்து சென்ற கணவருக்கு உதவிட பஹ்ரைன் பிரதமர் முன்வந்துள்ளார்.

 

 

ஒடிசா மாநிலத்திலுள்ள காலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த, பழங்குடியினத்தவரான தனா மாஜி, 49, தன் மனைவி அமாந்த் தேயை, 42, காசநோய் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்; எனினும், சிகிச்சை பலனின்றி அவரது மனைவி இறந்தார். ஏழ்மையில் வாடும் தனா, மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து தரும்படி கோரியும், மருத்துவமனை ஊழியர்கள், அவருக்கு உதவ மறுத்துவிட்டனர்.

 

வேறு வழியின்றி, மனைவியின் உடலை, தன் தோளில் சுமந்தபடி, 60 கி.மீ., தொலைவில் உள்ள தன் வீடு நோக்கி நடந்தார்; அவருடன், 12 வயதான மகளும், உடன் நடந்து சென்றார். மருத்துவமனையிலிருந்து, 12 கி.மீ., கடந்த நிலையில், வழியில் பத்திரிகையாளர் ஒருவரின் உதவியால், இதுகுறித்து கலெக்டருக்குதெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் உத்தரவால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின் தனா மாஜி, மனைவியின் உடலை ஆம்புலன்சில் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இச்செய்தியை கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா மனம் வருந்தி உள்ளார். பின் தனா மாஜிக்கு நிதி உதவி செய்ய விரும்பியுள்ளார். அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைன் தூதரகத்திற்கு, அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேட்ட விவரங்கள் கிடைத்ததும், விரைவில் தனா மாஜிக்கு பஹ்ரைன் பிரதமர் சார்பில் நிதி உதவி வழங்கப்படும். கடல் கடந்து எதிரொலிக்கும் மனித நேயத்தால் ஏழை குடும்பத்தின் வாழ்வு செழித்தால் மகிழ்ச்சியே.