ஸ்டாலின் போக்கு; அதிருப்தியில் கட்சித்


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரசுடன் கைகோர்த்து அரசியல் செய்வதில் இருந்து விலகி நின்றால்தான், கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று, கட்சியின் மூத்தத் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். அதற்காக, அவர்கள் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளையும் மேற்கோள் காட்டி பேசுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதா இறந்ததும், எதிர்க்க முடியாத சக்தியாக இருந்த ஒரு சக்தி மறைந்து விட்டது. இனி, அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் இருக்காது என்றுதான், ஒவ்வொரு தி.மு.க., தொண்டனும் நம்பினான். ஆனால், நடப்பதே வேறு.ஜெயலலிதா என்ற ஆளுமை மறைந்ததால், அ.தி.மு.க., பலவீனப்பட்டிருக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, எப்படியாவது ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க., வந்து விடும் என்று நம்பிய தி.மு.க., தொண்டன் அத்தனை பேரின் எண்ணங்களும் ஸ்டாலினின் நடவடிக்கைகளால் சிதைந்து போய் விட்டது
இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற துடிப்புடன், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.,வினர் தீயாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முழுமையாக பலவீனப்பட்டுக் கிடக்கும் காங்கிரசோடு கைகோர்த்து செயல்படுகிறது தி.மு.க.,கருணாநிதியின் சட்டசபை செயல்பாடுகளுக்காக நடத்தப்பட்ட பவளவிழாவுக்கு, பீஹார் முதல்கர் நிதிஷ் குமாரை அழைத்து வந்து பிரதானப்படுத்தினர். ஆனால், தன் மாநில நலன் மற்றும் கட்சி நலன் தான் முக்கியம் என்று, பிரதமர் மோடியை சந்தித்து திரும்பிய சில நாட்களிலேயே, பா.ஜ.,வோடு கைகோர்த்துக் கொண்டு, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சியை பீஹாரில் ஏற்படுத்தி, தானே மீண்டும் முதல்வர் ஆகி விட்டார் நிதிஷ் நேற்று வரை தன்னோடு ஆட்சிப் பொறுப்பில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசை நொடியில் கழற்றி விட்டு விட்டார்.அதோடு, தான் ஊழலுக்கு எதிரானவன் என்பதையும் மக்களிடம் மீண்டும் கொண்டு சென்று விட்டார். இப்படி, இந்திய அரசியல்வாதிகளெல்லாம் புத்திசாலித்தனத்தோடு அரசியல் செய்து கொண்டிருக்க, காங்கிரசோடு கூட்டணி வைத்து கொண்டு, அக்கட்சிக்கு கூஜா தூக்கிக் கொண்டிருப்பதை, தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டன் யாரும் விரும்பவில்லை.வெறும் 10 எம்.எல்.ஏ.,க்களை கையில் வைத்துக் கொண்டு, அ.தி.மு.க.,வுக்குள் கோஷ்டி அரசியல் நடத்தும் பன்னீர்செல்வம், நினைத்த மாத்திரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக நலன் குறித்து வலியுறுத்தும்போது, 89 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின், பிரதமர் மோடியை இதுவரை சந்திக்காமல் இருப்பது ஏன்? அப்பாயின்மெண்ட் இல்லையென்றால், அதற்கான லாபி, தி.மு.க., தரப்பிடம் இல்லை என்பதுதானே அர்த்தம்?குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை கடத்தி வந்து, பெங்களூரு ஹோட்டலில் தங்க வைத்திருப்பதற்கு எதிராக பா.ஜ., நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்க்கும் ஸ்டாலின், தமிழகத்தில், கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு, பண விளையாட்டுகள் நடந்த போது, வருமான வரித் துறையை ஏவி, மத்திய பா.ஜ., அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்கிறார். ஆனால், கூவத்தூரில் கூத்து நடந்த போது, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் யாராவது, பிரதமரை சந்தித்து, கூவத்தூர் கூத்து குறித்து மனு கொடுத்தார்களா?கோரிக்கையே விடுக்காதபோது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்வது எப்படி? அதுமட்டுமல்ல, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறை விதிகளை மீறி சொகுசு வசதிகளைப் பெற்றார். அதற்கு, கர்நாடக காங்கிரஸ் அரசில் இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினர் என குற்றச்சாட்டு எழுந்து, அது கர்நாடக அரசியல் வட்டாரங்களில் இன்றும் பரபரப்பாக இருக்கிறது.அந்த பிரச்னையில், கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் நிர்வாகத்தை எதிர்த்து, ஸ்டாலின் குரல் கொடுக்காதது ஏன்? கேட்டால், கூட்டணி கட்சி ஆட்சி நடக்கிறது. நாம் எப்படி கேட்க முடியும் என்கிறார் ஸ்டாலின். சசிகலா சிறை விதி மீறல் விஷயத்தில், சித்தராமையா நிர்வாகத்தை விமர்சிக்காத ஸ்டாலின், கூவத்தூரில் மட்டும் மத்திய அரசு வருமான வரித் துறையை ஏவி, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என, எந்த அடிப்படையில் எதிர்பார்க்கிறார்? ஆட்சி அதிகாரத்தில் உட்காருவதற்கு கிடைத்த சரியான சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விட்டார். இதையெல்லாம், சரி செய்து சரியான பாதையில் அரசியல் செய்தால் மட்டுமே, தி.மு.க., என்னும் மாபெரும் சக்திக்கு, தமிழகத்தில் சரியான அரசியல் களம் இருக்கும்.இந்தக் கருத்துக்களையெல்லாம், கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களிடம், கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் எடுத்து சொல்லி விட்டனர். இனி, ஸ்டாலின் செயல்பாடுகள்தான், அந்த கருத்துக்கள் ஏற்கப்பட்டதா இல்லையா என்பதை உணர்த்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

.