நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு

08/04/2017 கல்வி

ம.பி.,யில் குழந்தைகள் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், குடிசைப் பகுதியில் வசிக்கும் 5ம் வகுப்பு மாணவி, தனது வீட்டில் நூலகம் நடத்தி வருகிறார். இதனையறிந்த முதல்வர் சவுகான் நேரில் சென்று பாராட்டி நிதியுதவி செய்தார்.மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துர்கா நகர். சேரி பகுதியான இங்கு வசிக்கும் முஷ்கன் அகிர்வர்,11 என்பவர் நூலகம் நடத்தி வருகிறார். கடந்த வருடம், 25 புத்தகங்களுடன் துவக்கப்பட்ட இந்த நூலகம், தினமும் பள்ளி முடிந்த பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும்.
நூலகத்தின் வரவு செலவு, மற்றும் வாசகர்கள் குறித்த பதிவேட்டை பராமரித்து வரும்,அகிர்வர், தனது பகுதியில் வசிக்கும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நூலகம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

சிறுமியின் இந்த சேவையை அறிந்த முதல்வர் சவுகான், நேரில் சென்று முஷ்கினை பாராட்டி ரூ.2 லட்சத்திற்கான செக்கை வழங்கினார். நூலகத்திற்காக ஒரு அறை கட்டி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.முதல்வர் கூறுகையில், முஷ்கன் போன்றவர்கள் நாடு முழுதும் சேவை செய்யும் போது, நமது நாட்டின் நிலைமாறும். அவருக்கு தேவையான அனைத்து உதவியையும் மாநில அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்சிறுமி முஷ்கன் கூறுகையில், ஆரம்பத்தில் 25 புத்தகங்களுடன் நூலகத்தை துவக்கினேன். தற்போது ஆயிரம் புத்தகங்களுடன் நூலகம் வளர்ந்துள்ளது. இந்த வருடம் ஜூலை 7 ல் எனது தந்தை மனோகர் அஹிர்வர் காலமானபோது நூலகம் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது முதல்வர் உதவியை தொடர்ந்து நூலகம் தொடர்ந்து நடத்துவதையும், நூலகத்தால் குழந்தைகள் தொடர்ந்து முன்னேறுவதையும் யாராலும் தடுக்க முடியாது. எனது தந்தை என்னிடம் பெரிதாக செய். கடுமையாக உழைக்க வேண்டும் எனக்கூறுவார். நான் எதிர்காலத்தில் டாக்டராக விரும்புகிறேன். தினமும் 20 முதல் 25 குழந்தைகள் நூலகம் வந்து, தரையில் அமர்ந்து படிப்பார்கள். சில குழந்தைகள் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று படித்துவிட்டு திரும்ப கொடுப்பார்கள். புத்தகத்தை எடுத்து சென்றவர்கள் அதனை படிக்கிறார்களா என தெரிந்து கொள்ள அதிலிருந்து சில கேள்விகள் கேட்பேன். இவ்வாறு அவர் கூறினார்..