தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர்


 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி டெல்லியில் அறிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 4 மாதங்களைக் கடந்தும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி டெல்லியில் அறிவித்துள்ளார்.

இது குறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காங்கிரஸ் தலைவராக என்னை நியமித்த சோனியாவுக்கும், ராகுலுக்கும் நன்றி. கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் இல்லை. இனியும் இருக்காது.

கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழர்கள் நிதானம் இழக்கக் கூடாது'' என்றார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ''தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசர் கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைத்து செல்ல வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த விஜயதரணி, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலரும் திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்ததை வரவேற்றுள்ளனர்.